பாப்பாரப்பட்டி அருகே நின்றுகொண்டிருந்த டிராக்டர் மீது விளையாடிய 3 வயது சிறுமி தவறி விழுந்து சாவு
பாப்பாரப்பட்டி அருகே பெரியூர் கிராமத்தில் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த டிராக்டரில் ஏறி விளையாடிய 3 வயது சிறுமி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள்.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே பெரியூர் கிராமத்தில் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த டிராக்டரில் ஏறி விளையாடிய 3 வயது சிறுமி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள்.
டிராக்டரில் விளையாடிய சிறுமி
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பெரியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவர் தனது உறவினர் ஒருவரின் டிராக்டரை எடுத்து வந்து தன்னுடைய விவசாய நிலத்தில் உழுது முடித்துவிட்டு டிராக்டரை தனது வீட்டு முன்பு நிறுத்தி விட்டு சாப்பிடுவதற்காக சென்றார்.
அப்போது அங்கு வந்த முருகனின் மகள் கோபிகாஸ்ரீ (வயது 3) நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஏறி விளையாடி கொண்டிருந்தாள். திடீரென சிறுமி கோபிகாஸ்ரீ டிராக்டரில் இருந்து தவறி விழுந்தாள். இதில் டிராக்டரில் இரும்பு கலப்பையில் மோதி தலையில் பலத்த அடிபட்டது.
சாவு
அப்போது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமியின் தந்தை முருகன் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து சிறுமியை தூக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமி கோபிகாஸ்ரீ காதில் ரத்தம் வடிந்தது. உடனே பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு தனது மகளை முருகன் கொண்டு சென்றார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டாள். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாப்பாரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.