பயணிகள் வரத்து குறைவு காரணமாக விமான சேவைகள் ரத்து
மதுரை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து குறைவு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது;
மதுரை
மதுரை விமான நிலையத்தில் இருந்து கொரோனா ஊரடங்குக்கு பின்னர், படிப்படியாக விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரையில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு 20 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலைகாரணமாக, விமான நிலையத்தில் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரையில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், மதுரையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமான சேவையும் நேற்று முதல் மே மாதம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல், மதுரையில் இருந்து தினமும் மாலையில் சென்னைக்கு செல்லும் தனியார் விமானமும் பயணிகள் வரத்து குறைவு காரணமாக சேவையை ரத்து செய்துள்ளது.
இதேபோல மதுரையில் இருந்து மும்பைக்கு செல்லும் நேரடி விமான சேவை ரத்து செய்யப்பட்டு சென்னை வழியாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரையில் இருந்து சென்னை, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு மட்டும் 14 விமான சேவைகள் இயக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.