வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு ஊர் திரும்பிய போது வேன் கவிழ்ந்து வாலிபர் பலி
வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு ஊர் திரும்பிய போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியானார். 15 பெண்கள் காயம் அடைந்தனர்.;
நல்லம்பள்ளி:
வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு ஊர் திரும்பிய போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியானார். 15 பெண்கள் காயம் அடைந்தனர்.
வளைகாப்பு நிகழ்ச்சி
நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி ஓமல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்க்காக வேன் மூலம், தொப்பூர் அருகே உள்ள ஊத்துப்பள்ளம் கிராமத்திற்கு நேற்று வந்தனர். வேனை சிவாடி கிராமத்தை சேர்ந்த டிரைவர் விஜயகுமார் (வயது 23) என்பவர் ஓட்டி வந்தார். வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்து வீட்டு மீண்டும் தங்களது கிராமத்திற்கு செல்ல வேன் மூலம் ஊத்துப்பள்ளம் கிராமத்தில் இருந்து புறப்பட்டனர்.
வாலிபர் பலி
ஊத்துப்பள்ளம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் அந்த வேன் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பாகலஅள்ளி கிராமத்தை சேர்ந்த அஜய்குமார் (27) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 15 பெண்கள் காயம் அடைந்தனர். மேலும் சிலர் லேசான காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த அஜய்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.