கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவு
ீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் கோவை கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
கோவை
வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் கோவை கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
நிலம் கையகப்படுத்தியது
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதியம்மாள் (வயது 90). இவருக்கு கணபதி-ஆவாரம்பாளையம் சாலையில் இருந்த சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை கடந்த 7.9.1983 அன்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது.
அப்போது இந்த நிலத்திற்கான இழப்பீடு தொகையாக ஒரு சென்டுக்கு ரூ.200 ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த தொகை போதாது. இதை உயர்த்தி தரவேண்டும் என்று சரஸ்வதியம்மாள் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து சரஸ்வதியம்மாளுக்கு ஒரு சென்டுக்கு ரூ.6 ஆயிரம் என கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2005-ம் ஆண்டு கோவை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இழப்பீடு வழங்கவில்லை
ஆனால் இந்த தொகையை தர மறுத்து வீட்டுவசதி வாரியம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அங்கு ஒரு சென்டுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது.
ஆனால் இதை எதிர்த்து மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கீழ் கோர்ட்டு உத்தரவிட்ட ஒரு சென்டுக்கு ரூ.6 ஆயிரம் என இழப்பீடு கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்வதாகவும் உத்தரவிடப் பட்டது.
அதன்படி மனுதாரருக்கு ரூ.67 லட்சத்து 87 ஆயிரத்து 144யை 31.3.2021-ந் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கோவை வீட்டுவசதி வாரியம் நிறைவேற்றாததை தொடர்ந்து மனுதாரர் சரஸ்வதியம்மாள் மீண்டும் கோவை சார்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் வரதராஜ் மற்றும் சுப்பிரமணியம் மூலம் ஒரு மனு தாக்கல் செய்தார்.
ஜப்தி செய்ய உத்தரவு
இந்த மனு நீதிபதி செல்லையா முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் சரஸ்வதியம்மாளுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இழப்பீடு வழங்காததால் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஏர்கண்டிஷன், பீரோ, கணினிகள், மேஜைகள், நாற்காலிகள், மின்விசிறிகள், கார், ஜீப் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
மேலும் கோவை டாடாபாத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை பூட்டி சீல் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.