கிருஷ்ணகிரி கோர்ட்டில் பரபரப்பு: துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை
கிருஷ்ணகிரி கோர்ட்டு வளாகத்தில், நீதிபதியின் பாதுகாவலரான போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் பஞ்சலிங்கம். இவருடைய மகன் அன்பரசன் (வயது 28). இவர் கடந்த 2013-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். கிருஷ்ணகிரி ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக இருந்த இவர், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதியின் பாதுகாவலராக கடந்த டிசம்பர் மாதம் முதல் பணியாற்றி வந்தார்.
கைத்துப்பாக்கியுடன் நீதிபதிக்கு பாதுகாப்பாக இருந்த அவர் நேற்று முன்தினம் காலை பணிக்கு வந்துள்ளார். பின்னர் மாலை பணி முடிந்து நீதிபதி அவரது வீட்டிற்கு சென்ற பின், போலீஸ்காரர் அன்பரசனும் வழக்கம் போல் புறப்பட்டுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. அன்பரசன் வீட்டுக்கு வராததால் அவருடைய பெற்றோர், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
இ்ந்த நிலையில் நேற்று காலை அந்த கோர்ட்டின் மொட்டை மாடிக்கு துப்புரவு பணியாளர் ஒருவர் சென்றார். அப்போது அங்குள்ள படிக்கட்டில், தலையின் வலதுபுறம் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் அன்பரசன் பிணமாக கிடந்ததை கண்டு துப்புரவு பணியாளர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், சுப்பிரமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், அன்புமணி, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அன்பரசன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
3 மாத கர்ப்பிணி
இது குறித்து தகவல் அறிந்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோர்ட்டு வளாகத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள், அன்பரசனின் உடலை பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அன்பரசனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அன்பரசனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. அவரது மனைவி அருணா தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கோர்ட்டு வளாகத்திலேயே போலீஸ் சீருடையுடன் துப்பாக்கியால் சுட்டு போலீஸ் காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் நேற்று கோர்ட்டு பணிகள் முற்றிலும் முடங்கின.