பெண்ணாடம் அருகே தூக்கில் ரத்தக்காயங்களுடன் விவசாயி பிணம்

பெண்ணாடம் அருகே தூக்கில் ரத்தக்காயங்களுடன் விவசாயி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-04-22 15:58 GMT
பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் கார்வண்ணன் மகன் சேரநாதன்(வயது 44) விவசாயி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சேரநாதன், பெண்ணாடம் அருகே பெ.பூவனூர் மணக்காடு பகுதியில் ஒரு கூரை வீட்டில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் சேரநாதன், வீட்டில் ரத்தக்காயங்களுடன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேரநாதனின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சேரநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலையா?

இதற்கிடையே சேரநாதனின் தந்தை கார்வண்ணன் பெண்ணாடம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. மகனை யாரோ அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கி விட்டுள்ளனர். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேரநாதனை யாராவது அடித்து கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்