பரமக்குடி சித்திரை திருவிழா தொடங்கியது
பரமக்குடி சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது;
பரமக்குடி,ஏப்
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா காப்பு கட்டுடன் நேற்று ெதாடங்கியது. கொரோனா பரவல் காரணமாக அரசு வழிகாட்டுதலின்படி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்திற்குள்ளேயே பக்தர்கள் இல்லாமல் மூலவர், உற்சவர் சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்பு யாக சாலை பூஜைகள் தொடங்கின. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு 26-ந்தேதி இரவு வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அன்று இரவு பெருமாள் பூப்பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் அரசு வழிகாட்டுதலின்படி கோவில் வளாகத்திலேயே நடைபெற உள்ளது.
மறுநாள் 27-ந்தேதி குதிரை வாகன சேவை, 28-ந்தேதி நடைபெறும் தசாவதார நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலுக்கு உள்ளேயே நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் திரளாக பங்கேற்க அனுமதி இல்லை. சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கோவிலுக்கு பக்தர்கள் வருமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.