ஊழியருக்கு கொரோனா விழுப்புரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூடல்
வங்கி மூடல்
விழுப்புரம்,
விழுப்புரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது. உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்கள் வங்கியை தற்காலிகமாக மூடுவது என முடிவு செய்யப்பட்டு நேற்று முதல் அந்த வங்கி மூடப்பட்டது. நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வங்கி விடுமுறை என்பதால் மீண்டும் அந்த வங்கி வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) செயல்படும். இதற்கான அறிவிப்பு நோட்டீசு அந்த வங்கியில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக வங்கி முழுவதிலும் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து நன்கு சுத்தம் செய்தனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.