தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே குப்பை தீப்பற்றி எரிந்ததில் சுற்றுப் பகுதி முழுவதும் புகை பரவியதால் அவதிக்குள்ளான பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குப்பை தீப்பற்றி எரிந்தது
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு என்று அரசு சார்பில் தனி இடம் கிடையாது. இதனால் இந்த பகுதியில் உள்ள குப்பைகளை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கோமஸ்புரம் பகுதியில் சாலையோரத்தில் கொட்டி செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக குப்பை தீ பற்றியது.
பொதுமக்கள் சாலை மறியல்
இந்த தீயானது குப்பை முழுவதும் பற்றி எரிந்ததில் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது. இந்த புகையானது கோமஸ்புரம் ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதி முழுவதும் சூழ்ந்ததோடு கிழக்கு கடற்கரை சாலையிலும் சூழ்ந்தது. இதனால் கோமஸ்புரம் அருகே உள்ள ஹவுசிங் போர்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தாளமுத்து நகர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கை
பின்னர் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமாரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், கோமஸ்புரம் பகுதியில் இதுபோன்று அடிக்கடி நடப்பதால் இந்த பகுதி மக்களுக்கு இருமல், சளி, மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் வருகிறது.
எனவே அரசு முறையாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை கொட்டுவதற்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அவர் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
அதை தொடா்ந்து சிறிது நேரம் கழித்து தூத்துக்குடி தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.