ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-22 14:13 GMT
ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரி சிறந்த கோடை வாசஸ்தலமாக உள்ளது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டியில் தங்கி இருந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்வார்கள்.

 இதற்கிடையே கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, பின்னர் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது. தற்போது கொரோனா 2-வது அலை பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. 

ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அருகே வியாபாரிகள் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வருவதால், கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தனர். சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், அதன் அருகே உள்ள கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. 

அவர்கள் பொருட்களை வெளியே எடுத்து சென்றும், விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டி தாவரவியல் பூங்கா முன்பகுதியில் திபெத்தியன் மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது. சாலையோரத்தில் கடைகள் திறந்து இருந்தும், சுற்றுலா பயணிகள் வர அனுமதி இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் செய்வதறியாத நிலையில் இருக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு ஊட்டியில் தயார் செய்யப்படும் வர்க்கி, சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றை வாங்கி செல்வார்கள். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வந்தோம். 

மீண்டும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடை வாடகை கட்டுவது, குழந்தைகளின் படிப்பு செலவை கவனிப்பது சிரமமாக இருக்கிறது. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்