சிக்னல் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி

பல்லடம் அருகே மர்ம ஆசாமிகளால் கத்தியால் குத்தப்பட்ட ஒடிசா மாநில டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து தப்பி வந்து, பல்லடம் சிக்னல் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-04-22 13:54 GMT
பல்லடம்
பல்லடம் அருகே மர்ம ஆசாமிகளால் கத்தியால் குத்தப்பட்ட ஒடிசா மாநில டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து தப்பி வந்து, பல்லடம் சிக்னல் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
தற்கொலைக்கு முயற்சி
 பல்லடத்தில் உள்ள கோவை  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நால்ரோடு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றுகாலை 11 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க  வாலிபர் ஒருவர், அந்த சிக்னல் கம்பத்தின் மீது படபடவென்று ஏறினார். பின்னர் சிக்னலின் உச்சிக்கு சென்றதும் அங்கு தலைகீழாக தொங்கி சேட்டைகள் செய்தார். பின்பு அங்கிருந்து குதிக்க முயற்சி செய்தார். 
இதனை அங்கிருந்து பார்த்த போக்குவரத்து போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். இதற்குள் அந்த வழியாகச்சென்ற லோடு லாரியை சிக்னல் கம்பத்திற்கு நேர் கீழே நிறுத்தி  அவரை பத்திரமாக மீட்டனர். அப்போது அந்த வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தன. 
பத்திரமாக மீட்பு
இதையடுத்து அந்த வாலிபரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காங்கேஷ்வர் வயது 32 என்பதும், தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில், மர்ம ஆசாமிகள் 3 பேர் இவரை கத்தியால் குத்தி, செல்போன் மற்றும் ரூ.4,500 ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில், அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பி பல்லடம் வந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்