வாணியம்பாடியில் பட்டு விவசாயிகள் திடீர் போராட்டம்
வாணியம்பாடியில் உள்ள பட்டு வளர்ச்சித்துைற உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திரண்டு பட்டுக்கு முறையான விலையை நிர்ணயிக்கக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி
பட்டுக்கூடுகளை வாங்காமல் அலைக்கழிப்பு
வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.
அந்தப் பட்டுக்கூடுகளை அரசால் நிர்ணயிக்கப்படும் விலைக்கு விற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வாணியம்பாடி அலுவலகத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் பட்டுக் கூடுகளை அதிகாரிகள் வாங்காமல் அலைகழித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் மற்ற மாவட்டங்களில் நிர்ணயித்து கொள்முதல் செய்யும் விலையை விட, வாணியம்பாடியில் குறைவான விலைக்கு எடுப்பதாலும், இங்குள்ள அதிகாரிகளின் அலட்சிய போக்கால் வியாபாரிகளை தொடர்பில் வைத்துக்கொள்ளாமல், ஒருசில வியாபாரிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்தும், அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு பட்டுக்கூடுகள் விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.
முறையான விலையை நிர்ணயிக்கக்கோரிக்கை
அரசு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டு நூற்பாலை எந்திரம் இங்கு அமைத்துள்ள நிலையில், அதைப் பயன்படுத்தாமல் பட்டு விவசாயிகள் கொண்டு வரும் பட்டுக்கூடுகளை திருப்பத்தூர் பகுதியில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறி வருகின்றனர்.
இதுபற்றி அரசு தலையிட்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் உள்ள பட்டு வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து நேற்று காலை பட்டு விவசாயிகள் மீண்டும் வந்து பட்டுக்கூடுகளை அங்குள்ள தட்டுகளில் ெகாட்டி, பட்டுக்கூடுகளுக்கு முறையான விலையை நிர்ணயிக்கக்கோரி மீண்டும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்ததன் பேரில், விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனை செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர். விவசாயிகள் திடீர் போராட்டத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.