வேலூரில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி

வேலூரில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-04-22 12:52 GMT
வேலூர்

7 பேர் பலி

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் அரசு மற்றும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றனர்.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் நேற்று முன்தினம் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் தொற்று பரவல் ஒருபுறம் அதிகரிக்க மற்றொருபுறம் இறப்பும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

இறந்தவர்கள் குறித்த விவரம் வருமாறு:-

மேற்கு வங்க மாநிலம் அகிராம்முசார்பாத் என்ற பகுதியை சேர்ந்த ரபியுள் (வயது 37) என்பவர் வேலூருக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் கடந்த 20-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பாப்பனாம்பட்டு கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயா (38). இவர் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் சவுகார்தெருவை சேர்ந்தவர் ஷபீர்அகமத் (70). இவர் கடந்த 19-ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், மெல்லபாடி பகுதியை சேர்ந்த நோபோமி ஜோசப் (78) என்ற மூதாட்டி கடந்த 17-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். உத்திரபிரதேச மாநிலம் பெல்பர்பூர் வாரணாசி பகுதியை சேர்ந்த சரோஜ்வர்மா (42) என்ற பெண் கடந்த 14-ந் தேதி கொரோனா சிறப்பு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டார்.

இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.
விருதுநகரை சேர்ந்தவர்

விருதுநகர் மாவட்டம் பி.டி.ஆர்.நகரை சேர்ந்த விஜயரகுநாதன் (50). இவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார். இதேபோல ஜார்க்கண்ட் மாநிலம் ஹிர்பிரி ராஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஜீனர்பர்வீன் (40) என்ற பெண் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் பாதுகாக்கப்பட்ட முறையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்