தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ தெரிவித்து உள்ளார்.

Update: 2021-04-22 11:32 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் தங்களது வாழ்நாள் சான்றிதழை வருகிற 30-ம் தேதிக்குள்  சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறியுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உதவித்தொகை
மாற்றுத் திறனாளிகள் துறையின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், நாள்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர் மற்றும் 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட பலவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாதாந்திர உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தூத்துக்குடி கலெக்டர்  அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத் திறானளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். 
அதன் ஒரு நகலை மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் வங்கிகளுக்கு வருகிற ஏப்.30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 0461-2340626 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்