கல்வியின் சிறப்பை போற்றும் ‘ஆட்டோ கிராப்’
அளவுக்கு சுண்டி இழுக்கும் வார்த்தைகளை வாசகங்களாக எழுதி அதை படிப்பவர்களை சிந்திக்க வைத்து விடுகிறார்கள்.;
அது என்னவோ ஆட்டோவுக்கு பின்னால் எழுதப்படும் வாசகங்கள் மட்டும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுவதே இல்லை. அந்த அளவுக்கு சுண்டி இழுக்கும் வார்த்தைகளை வாசகங்களாக எழுதி அதை படிப்பவர்களை சிந்திக்க வைத்து விடுகிறார்கள்.
அந்தவகையில் புதுச்சேரியிலும் பல்வேறு ஆட்டோக்களில் பின்புறம் சிந்திக்க தூண்டும் வாசகங்கள் இடம்பெற தவறவில்லை. அதில் ஒரு ஆட்டோவில் எழுதப்பட்டிருந்த வாசகம் கல்வியின் மேன்மையை உணர்த்துவதாக இருந்தது.
‘நீரில் கரையாதது, நெருப்பில் வேகாதது, காற்றால் கலையாதது, காலத்தால் அழிக்க முடியாதது- கல்வி’ எனவும், ‘வீடு வரை உறவு, காடு வரை பிள்ளை கடைசி வரை நாம் கற்ற கல்வி’ எனவும் எழுதப்பட்டு இருந்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைப்பதாக இருந்தது.
இந்த ஆட்டோவை ஓட்டி வரும் ஆட்டோ டிரைவர் பாண்டியன் படித்ததோ 8-ம் வகுப்பு வரைதான். திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறையை பூர்வீகமாக கொண்ட இவர் சிறு வயதிலேயே புதுச்சேரிக்கு வந்துவிட்டார். ஓட்டல், ரிக்ஷா தொழிலாளி என்று பல வேலைகளை பார்த்து விட்டு இறுதியாக கடந்த 1995-ம் ஆண்டு ஆட்டோ டிரைவராக மாறினார்.
கல்வியின் மேன்மை குறித்த வாசகங்களை ஆட்டோவில் எழுத தூண்டியது எப்படி என்பது குறித்து அவரிடம் கேட்டபோது, நான் ஓட்டிய ஆட்டோவில் சென்று படித்த குழந்தைகள் பலர் இப்போது டாக்டர்கள், என்ஜினீயர்கள் என உள்ளனர். பலர் வெளிநாடு சென்றுள்ளனர். இந்த ஆட்டோவை எனக்கு சொந்தமாக வாங்கி கொடுத்ததே அவர்கள் தான். அவர்களால் கல்வியின் சிறப்பை உணர்ந்து எழுத வைத்தது தான் இந்த வாசகங்கள் என்று சொல்லி மலரும் நினைவுகளை பகிர்ந்தார்.