பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடியோவில் கணவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார்.;
பெங்களூரு,
பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கதிரேனஹள்ளியில் வசிப்பவர் ஜெயகுமார். இவரது மனைவி தீபிகா (வயது 26). இந்த நிலையில், வரதட்சணை கேட்டு தனது மனைவியை ஜெயகுமார் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜெயகுமாருடன் வாழ பிடிக்காமல் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு தீபிகா சென்றிருந்தார். பெற்றோர் வீட்டில் இருந்து திரும்பிய தீபிகா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பனசங்கரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபிகாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் வரதட்சணை கேட்டு கணவர் ஜெயகுமார் கொடுமைப்படுத்துவதால் தற்கொலை செய்வதாக அவர் கூறி இருந்தார். மேலும் தற்கொலைக்கு முன்பாக தான் பேசுவதை தீபிகா செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தார். அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:-
திருமணமான நாளில் இருந்து தன்னிடம் வரதட்சணை கேட்டு ஜெயகுமார் கொடுமைப்படுத்தினார். என்னை அடித்தும் துன்புறுத்தினார். அவரது தொல்லை தாங்க முடியாமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். ஆனாலும் பணம் கொடுக்கும்படி கூறி மிரட்டினார். பணம் கொடுக்கவில்லை எனில் விவாகரத்து கொடுக்கும்படி கேட்டு தொல்லை கொடுக்கிறார். எனது மகன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டான். கணவருடன் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதால் தற்கொலை செய்கிறேன். எனது கணவருக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இதுகுறித்து பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா. மேலும் தலைமறைவாகி விட்ட ஜெயகுமாரை போலீசார் தேடிவருகிறார்கள்.