அயன் பட பாணியில் வயிற்றுக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்திய பெண்கள் உள்பட 3 பேர் கைது தமிழகத்தை சேர்ந்தவர்கள்
அயன் பட பாணியில் வயிற்றுக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்திய பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது 2 பெண்கள் உள்பட 3 பயணிகள் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது அவர்களது உடைமைகளில் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் 3 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது வயிற்றுக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்ததை 3 பேரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேருக்கும் இனிமா கொடுத்து தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் ஒரு பெண் பயணியிடம் இருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான தங்கமும், இன்னொரு பெண் பயணியிடம் இருந்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான தங்கம், ஆண் பயணிடம் இருந்து ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் தங்கம் என 3 பயணிகளிடம் இருந்து ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் 3 பேரையும் பிடித்து விமான நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். விசாரணையில் பெண்கள் 2 பேரும் தமிழ்நாடு திருச்சியை சேர்ந்தவர்கள் என்பதும், ஆண் பயணி ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. ஆனால் அவர்களின் பெயர்களை கூற போலீசார் மறுத்து விட்டனர்.
தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த அயன் படத்தில் வயிற்றுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருட்களை கடத்துவார்கள். அதே பாணியில் வயிற்றுக்குள் மறைத்து வைத்து 3 பேரும் தங்கத்தை கடத்தி வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.