இடங்கணசாலையில் தற்கொலை செய்த பெண்ணின் கணவர் கைது
தற்கொலை செய்த பெண்ணின் கணவர் கைது
இளம்பிள்ளை:
இடங்கணசாலை ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 37), விசைத்தறி தொழிலாளி. இவருக்கும் ஆம்பூர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற ஞானமலர் (29) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து, இறந்து விட்டது. இதையடுத்து கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த சங்கீதா கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சங்கீதாவின் தாயார் சாலம்மாள் கொடுத்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சரவணன் மீது மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சங்ககிரி உதவி கலெக்டர் வேடியப்பனும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.