மழைக்காலங்களில் மின்விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? அதிகாரி விளக்கம்
மழைக்காலங்களில் மின்விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது குறித்து நெல்லை மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் கி.செல்வகுமார் விளக்கம் அளித்து உள்ளார்.
நெல்லை, ஏப்.22-
மழைக்காலங்களில் மின்விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது குறித்து நெல்லை மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் கி.செல்வகுமார் விளக்கம் அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பலத்த காற்று, இடி, மின்னல் மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கீழ்க்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும்.
காற்று, மழை மற்றும் இடி, மின்னலின்போது மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்லக்கூடாது. மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகே செல்வதோ, தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மின்வாரிய அலுவலர் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடி, மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களுக்கு அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியிலோ நிற்கக்கூடாது. கான்கிரீட் கூரை கட்டிடங்களில் நில்லுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சம் அடையுங்கள்.
இடி, மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்ேபான் மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது. மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கி இருக்கும்போது, அதன் அருகே செல்லக்கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.
மழையின்போது வீடுகளில் உள்ள சுவர்களில் நீர் கசிவு இருந்தால், அந்த பகுதியில் மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டதால் மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகள் மின்கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்தவோ, மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே ஒயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது. வீடுகள், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றியில் ஏற்படும் மின்பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்கக்கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
மேலும் மின்தடை நிவர்த்திக்கு 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுதவிர பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பழுதான மின்கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின்கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின்பகிர்வு பெட்டிகள் போன்றவற்றை படத்துடன் முழு முகவரியை குறிப்பிட்டு 9445850811 அல்லது 8903331912 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். பொதுமக்கள் மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து மின்சார விபத்துகளை தடுப்பதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.