2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கத்தை கத்தையாக சிக்கின

2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கத்தை கத்தையாக சிக்கின

Update: 2021-04-21 21:40 GMT
கோவை

கோவையில் கத்தை கத்தையாக 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கின. இது தொடர்பாக 2 பேரை மடக்கி பிடித்து கேரள போலீஸ் கைது செய்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள்

கேரள மாநிலம் கொச்சி நகரம் உதயம் பேரூர் காவல் நிலைய போலீசாருக்கு கேரளா மற்றும் கோவையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை சிலர் புழக்கத்தில் விடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் அவர்கள் நடத்திய விசாரணையில், கோவையில் அந்த கும்பல் கள்ள நோட்டுகளை வீடுகளில் பதுக்கி வைத்து உள்ளது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் கேரள போலீஸ் தனிப்படையினர் நேற்று கோவை வந்து கரும்புக்கடை வள்ளல் நகர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு வசிக்கும் அஸ்ரப் (வயது24) என்பவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியில் உள்ள செய்யது சுல்தான் (32) என்பவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

கத்தை கத்தையாக பறிமுதல்

முன்னதாக செய்யது சுல்தான் வீட்டில் கேரளா மற்றும் கோவை போலீசார் இணைந்து சோதனை நடத்தினார்கள். இதில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த நோட்டுகள் எங்கிருந்து வந்தது? அதை புழக்கத்தில் விட்டவர்கள் யார்? என்பது உள்பட பல்வேறு தகவல்களை தனிப்படை போலீசார் 2 பேரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

இதையடுத்து கைதான 2 பேரையும் இரவோடு இரவாக கேரளாவுக்கு அழைத்து சென்றனர். கோவையில் கத்தை கத்தையாக 1.8 கோடிக்கு 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் கள்ள நோட்டு கும்பல் ஏற்கனவே பிடிபட்டுள்ளது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் கோவையில் அஷ்ரப் அலி, சையது சுல்தான் ஆகியோர் செயல்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்