தொழிலாளி வெட்டிக்கொலை

சேதுபாவாசத்திரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-04-21 21:17 GMT
சேதுபாவாசத்திரம்;
சேதுபாவாசத்திரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். 
தொழிலாளி
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அழகியநாயகிபுரத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது 45). தொழிலாளி. இவர் நேற்று இரவு 11 மணி அளவில் சேதுபாவாசத்திரம் கடைவீதிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். 
பத்துக்காடு முக்கம் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் சிலர் வந்து அவரை வழிமறித்தனர். இதனால் அன்புரோஸ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
அரிவாளால் வெட்டினர்
உடனே மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அன்புரோசை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அன்புரோஸ் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். 
பரிதாப சாவு 
அன்புரோசின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை மீட்டு அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தி்ல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அன்புரோசை வெட்டிக்கொன்றவர்கள் யார்? அவரது கொலைக்கான காரணம் என்ன? போன்ற தகவல்கள் உடனடியாக தெரியவில்லை. 
வலைவீச்சு
இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்