எம்.எல்.ஏ.வின் மாமியார் உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலி
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எம்.எல்.ஏ.வின் மாமியார் உள்பட 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.;
பெரம்பலூர்:
10 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 10 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,423 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,340 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 61 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எம்.எல்.ஏ.வின் மாமியார்
இந்நிலையில் வேப்பந்தட்டை தாலுகா சாத்தனவாடி கிராமத்தை சேர்ந்த பிச்சமுத்துவின் மனைவி செல்லம்மாள்(வயது 80). இவர், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரனின் மாமியார் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செல்லம்மாள் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ேமற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயிரிழந்துள்ளது.
2 பேர் சாவு
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 43 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,184 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 49 வயது ஆண் ஒருவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொதுமக்கள் அச்சம்
இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 4,923 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 210 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.