புஞ்சைபுளியம்பட்டி, அந்தியூர், ஊஞ்சலூர் பகுதி கோவில்களில் ராமநவமியையொட்டி சிறப்பு வழிபாடு

புஞ்சைபுளியம்பட்டி, அந்தியூர், ஊஞ்சலூர் பகுதி கோவில்களில் ராமநவமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2021-04-21 20:58 GMT
புஞ்சைபுளியம்பட்டி, அந்தியூர், ஊஞ்சலூர் பகுதி கோவில்களில் ராமநவமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள தென் சீரடி சாய்பாபா கோவிலில் ராமநவமி விழா நடந்தது. இதையொட்டி சாய்பாபா மற்றும் ராமர், சீதை சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் சிலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவில், கீழ் முடுதுறை திம்மராயபெருமாள் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அனுமன் வாகனத்தில் ராமர் சீதா தேவி, லட்சுமணருடன் காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
அந்தியூர்
அந்தியூர் தேர் வீதியில் உள்ள பேட்டை பெருமாள் கோவிலில் ராம நவமியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதில் அந்தியூர் தவிட்டுப்பாளையம், சந்தியபாளையம், புதுப்பாளையம், வெள்ளையம்பாளையம், பருவாச்சி, வெள்ளித்திருப்பூர், அத்தாணி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் வளாகத்தில் ராம நவமியையொட்டி ராமர் படம் வைக்கப்பட்டு பஜனைப் பாடல்கள் பாடப்பட்டன.
அதேபோல் ஊஞ்சலூரில் சத்திரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ராமர் பட்டாபிசேகம் படம் வைக்கப்பட்டு பஜனைப் பாடல்கள் பாடி ராமநவமி விழா எளிமையாக கொண்டாடபட்டது. மேலும் கொளாநல்லி பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவிலிலும், வடக்கு புதுப்பாளையம் லட்சுமி நரசிம்மர், பால ஆஞ்சநேயர் கோவிலிலும் ராமநவமி விழா நடந்தது.

மேலும் செய்திகள்