சிறுமிகளுக்கு மிட்டாய் வாங்கி கொடுத்த வடமாநில வாலிபருக்கு அடி-உதை

டி.கல்லுப்பட்டி அருகே சிறுமிகளுக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து கடத்த வந்ததாக கருதி வடமாநில வாலிபரை கட்டி வைத்து கிராம மக்கள் தாக்கினர்

Update: 2021-04-21 20:49 GMT
பேரையூர், ஏப்
மதுரை டி.கல்லுப்பட்டி அருகே  வன்னிவேலம்பட்டி உள்ளது. இந்த பகுதிக்கு 25 வயது மதிக்கத்தக்க வட மாநில இளைஞர் ஒருவர் நேற்று வந்தார். வன்னிவேலம்பட்டி மந்தை பகுதிக்கு வந்த அவர், அங்குள்ள சிறுமிகளுக்கு கடையில் மிட்டாய் கொடுத்தார். இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. 
இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்து வந்த கிராம மக்கள் அந்த வடமாநில இளைஞரை பிடித்து விசாரித்தனர். மொழி புரியாததால் அவர் திருதிருவென முழித்தார். இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் அந்த வாலிபரை மந்தை பகுதியில் கட்டிவைத்து அடித்து உதைத்தனர். 
மேலும் அவர் சிறுமிகளை கடத்த வந்ததாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் வடமாநில வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபர் சாப்பிட்டு 3 நாட்கள் ஆனதாகவும், ஊருக்குச் செல்ல வழியில்லாததால் இப்பகுதியை சுற்றி வந்ததும் தெரியவந்தது. 
சிறுமிகளை பார்த்த ஆசையில் கையில் இருந்த காசில் மிட்டாய் வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து டி.கல்லுப்பட்டி போலீசார் அவரை விடுவித்து உணவு வாங்கிக் கொடுத்து மாட்டுத்தாவணி செல்ல பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்