நீரில் மூழ்கி குறும்பட உதவி இயக்குனர் பலி

டி.கல்லுப்பட்டி அருகே கல்குவாரி நீரில் மூழ்கி குறும்பட உதவி இயக்குனர் பரிதாபமாக இறந்தார்

Update: 2021-04-21 20:38 GMT
பேரையூர்
டி.கல்லுப்பட்டி அருகே கல்குவாரி நீரில் மூழ்கி குறும்பட உதவி இயக்குனர் பரிதாபமாக இறந்தார்.
குறும்படம் எடுக்க வந்தனர்
கல்வி விழிப்புணர்வு குறும்படம் எடுப்பதற்காக 15 பேர் கொண்ட படக்குழுவினர் கடந்த 3 நாட்களாக மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை பார்வையிட்டு வந்தனர். இந்தநிலையில் டி.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி மலையடிவார பகுதியில் கல்குவாரி அமைந்துள்ள இடத்தை படக்குழுவினர் பார்வையிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென குறும்பட உதவி இயக்குனர் தினேஷ்(வயது 25) என்பவர் கல்குவாரி நீரில் தவறி விழுந்தார். 
தண்ணீரில் விழுந்த அவர் நீச்சலடித்து கரையை எட்டுவதற்காக முயன்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி விட்டார். உடனே படக்குழுவினர் டி.கல்லுப்பட்டி போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். 
பிணமாக மீட்பு
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் முகமதுநூர்தீன், தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) சீனிவாசன் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து குவாரி பள்ளத்தில் இறங்கி தினேசை தேடினர். சுமார் அரைமணி நேர போராட்டத்திற்கு பின்னர் தினேஷின் உடலை அவர்கள் பிணமாக மீட்டனர். பின்னர் தினேஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து படக்குழுவினரிடம் விசாரித்து வருகின்றனர்.
இறந்த தினேஷ் திருச்சியை சேர்ந்தவர். திருமணமாகாதவர். கல்வி விழிப்புணர்வுக்காக குறும்படம் எடுக்க வந்த இடத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடரும் சம்பவம்
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன்குறிச்சி மலை அடிவாரத்தில் செயல்படாமல் கல்குவாரி பள்ளம் உள்ளது. அந்த பள்ளத்தில் 40 அடி தண்ணீர் நிறைந்துள்ளது. பள்ளத்தை சுற்றி எந்த ஒரு பாதுகாப்பு அமைப்பும் இல்லாத நிலையில் இதுவரை 3 பேர் இந்த குவாரி பள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இனிமேலாவது குவாரி பள்ளத்தை சுற்றி வேலி அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன் வரவேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்