நெல்லை அருகே லாரி மீது கார் மோதல்; பெண் பலி

நெல்லை அருகே நேற்று முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-04-21 20:33 GMT
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அமராவதி விளையைச் சேர்ந்தவர் சகாய குணசீலன். இவருடைய மனைவி சகாய பாத்திமா (வயது 42). இவர்களுடைய மகள் சகாய ஆஷா (17). சகாய பாத்திமா ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக, காரில் மகள் சகாய ஆஷாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். காரை அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட ஜோதி ஓட்டினார். கார் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நெல்லை அருகே உள்ள நாரணம்மாள்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த சகாய பாத்திமா பலத்த காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சகாய ஆஷா, மணிகண்ட ஜோதி ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகாய பாத்திமா உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சகாய பாத்திமா பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் பிள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்