வேன் மரத்தில் மோதி மாற்றுத்திறனாளி உள்பட 5 பேர் படுகாயம்
வேன் மரத்தில் மோதி மாற்றுத்திறனாளி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை,ஏப்.
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி இந்திரகுமார், டேனியல், காளிதாஸ், புனிதா மற்றும் டிரைவர் முத்துச்சாமி உள்பட 5 பேர் சரக்கு வேனில் சென்று ஆங்காங்கே பாடல்களை பாடி பொதுமக்கள் தரும் நிதியினை வைத்து தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் நேற்று அருப்புக்கோட்டையில் இசை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பந்தல்குடி அருகே நாகலாபுரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். நாகலாபுரம் புதூர் விலக்கு அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் இருந்த மரத்தின் மீது வேன் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் வேனின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் வேனில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இந்திரகுமார் (வயது52), டேனியல் (49) இருவரும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 3 பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.