இரவு நேர ஊரடங்கால் திருச்சி மண்டலத்தில் 120 பஸ்களின் சேவை ரத்து
இரவு நேர ஊரடங்கு காரணமாக திருச்சி மண்டலத்தில் 120 பஸ்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,
இரவு நேர ஊரடங்கு காரணமாக திருச்சி மண்டலத்தில் 120 பஸ்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரவு பஸ் போக்குவரத்துக்கு தடை
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது நேற்று முன்தினம் இரவு முதல் அமலுக்கு வந்து விட்டது.
அந்த நேரங்கள் அவசர தேவைகளை தவிர எந்தவித வாகனங்களும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து என்பது முற்றிலும் இரவில் முடக்கப்பட்டுள்ளதால் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக பஸ் போக்குவரத்திற்கான அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஆர்வமில்லா பயணிகள்
வேகமாக பரவி வரும் கொரோனா அச்சம் ஒருபுறம், சுட்டெரிக்கும் வெயில் ஒருபுறம் என வாட்டி வதைப்பதால் பஸ்களின் பகல்நேர பயணம் மேற்கொள்ள பெரும்பாலான பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று காலை வேளையில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
காலை 11 மணிக்கு மேல் பிற்பகல் 3 மணிவரை வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகளை காணமுடிந்தது. அந்த வேளையில் மத்திய பஸ் நிலையம் முழுவதும் பஸ்களால் நிறைந்திருந்தது.
இரவில் அதிகரித்த கூட்டம்
திருச்சியில் இருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்குத்தான் கடைசி பஸ் என்பதாலும், அதன் பின்னர் இதர ஊர்களுக்கு செல்பவர்களும் பஸ் நிலையம் வந்ததால் மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு நேர ஊரடங்கு காரணமாக பஸ்களின் எண்ணிக்கையையும் போக்குவரத்து அதிகாரிகள் குறைத்துள்ளனர்.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொதுமேலாளர் ராஜ்மோகன் கூறியதாவது:-
120 பஸ்கள் ரத்து
திருச்சி மண்டலத்தில் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் 500 புறநகர் பஸ்கள், 250 டவுன் பஸ்கள் என மொத்தம் 750 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. டவுன் பகுதிகளுக்கு இரவு 9.30 மணியுடன் பஸ் சேவை நிறுத்தப்படும். இரவு 10 மணிக்குள் அனைத்து பஸ்களும் பணிமனைகளுக்கு சென்று விட வேண்டும்.
ஆனால், சென்னை மற்றும் தொலைதூரத்தில் இருந்து திருச்சி வரும் பயணிகள் பஸ், தாமதமாக வந்து சேருகிறது. அதுபோன்று தாமதமாக வரும் பயணிகள் சிலர், திருச்சி பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்ல பஸ் இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. எனவே, அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை உணர்ந்து தங்கள் பயணத்தை திட்டமிட்டு விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம் ஆகும்.
இரவு நேர ஊரடங்கால் போக்குவரத்து துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்டு திருச்சி மண்டலத்தில் 120 பஸ்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, திருச்சி-50, அரியலூர்-40, பெரம்பலூர்-30 என 120 பஸ்கள் ஓடவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.