திருச்சி மாவட்டத்தில் புதிய உச்சம்: புதிதாக 357 பேருக்கு கொரோனா; முதியவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று புதிதாக 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நேற்றைய பரிசோதனை முடிவில் ஒரே நாளில் மட்டும் 357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 19,852 ஆக உயர்ந்துள்ளது. தொடர் சிகிச்சையில் 2,512 பேர் உள்ளனர். 187 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 17,141 ஆகும். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கொரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 3 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்த 70 வயது முதியவர் மற்றும் 48 வயது ஆண் என 2 பேர் நேற்று உயிரிழந்தார். கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.