திருச்சியில் காதல் தோல்வியால் பெண் போலீஸ் தற்கொலை

திருச்சியில் காதல் தோல்வியால் ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-04-21 19:17 GMT

கே.கே.நகர்,
திருச்சியில் காதல் தோல்வியால் ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண் போலீஸ்

சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். அவருடைய மகள் கவுசல்யா (வயது 24). எம்.ஏ. பட்டதாரியான இவர், கடந்த 2017-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார்.
தற்போது திருச்சி ஆயுதப் படையில் பணியாற்றி வந்த கவுசல்யா, ஆயுதப்படை குடியிருப்பில் தங்கி இருந்தார். அப்போது தன்னுடன் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

காதலுக்கு எதிர்ப்பு

இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்காக அந்த போலீஸ்காரர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கவுசல்யாவின் வீட்டிற்கு சென்று பெண்கேட்டுள்ளார். ஆனால் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள்.

இதனால், கவுசல்யாவின் பெற்றோர், சாதியை காரணம் காட்டி, அவருக்கு தங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் மனமுடைந்தனர்.

தற்கொலை

கடந்த மாதம் அந்த போலீஸ்காரருக்கு, அவருடைய தாய்மாமன் மகளை திருமணம் செய்துவைத்தனர். இதனால் கவுசல்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்தநிலையில் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கவுசல்யா நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த எலிப்பசையை (விஷம்) தின்று மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சிகிச்சையில் இருந்த கவுசல்யா, தனது சாவுக்கு பெற்றோரோ, காதலனோ யாரும் காரணம் இல்லை. காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ள எலிப்பசையை தின்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தநிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கவுசல்யா நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து கே.கே.நகர் போலீசார், கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்