மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது
குடும்ப தகராறில், மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
குத்தாலம்:
குடும்ப தகராறில், மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அன்னவாசல் ஊராட்சி வாடாகுடி காலனி தெருவை சேர்ந்தவர் வீரமணி(வயது 55). பந்தல் அமைக்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி மோகனாம்பாள் (45) இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோகனாம்பாள் கடந்த ஒரு வருடமாக கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் அதே ஊரில் தனியாக வசித்து வந்தார். வீரமணி, திருக்கடையூரில் உள்ள தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார்.
கழுத்தை அறுத்து கொலை
நேற்று காலை மோகனாம்பாள் கூலி வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். வாடாகுடி அருகேயுள்ள மாந்தை மெயின் ரோடு பாலம் அருகில் அவர் வந்து கொண்டு இருந்தபோது வீரமணி வழிமறித்தார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மோகனாம்பாளின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார். உடனே வீரமணி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
கைது
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் போலீசார், மோகனாம்பாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய வீரமணியை திருக்கடையூரில் உள்ள அவரது அண்ணன் வீட்டுக்கு செல்லும் வழியில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வீரமணியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடுரோட்டில் மனைவியின் கழுத்தை அறுத்து தொழிலாளி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.