கொலை வழக்காக மாற்றக்கோரி உறவினர்கள்- அரசியல் கட்சியினர் சாலை மறியல்

செங்கல் சூளை தொழிலாளி சாவில் மர்மம் உள்ளதாக கூறி வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி நேற்று சீர்காழியில் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-21 17:36 GMT
சீர்காழி:
செங்கல் சூளை தொழிலாளி சாவில் மர்மம் உள்ளதாக கூறி வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி நேற்று சீர்காழியில் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தொழிலாளி மர்மச்சாவு
சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் கடந்த 17-ந் தேதி அதே கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 42) என்பவர் செங்கல் சூளையில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். 
இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சீனிவாசன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
இந்தநிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்த சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பாதுகாப்போடு பிரேத பரிசோதனை
இதையடுத்து நேற்று முன்தினம் 4-வது  நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்போடு சீனிவாசனின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை  செய்யப்பட்டது. ஆனால் சீனிவாசனின் உடலை வாங்க உறவினர்கள், கிராம மக்கள், அரசியில் கட்சியினர் மறுப்பு தெரிவித்து,
மர்மமான முறையில் இறந்த சீனிவாசனின் வழக்கை திருவெண்காடு போலீசார் கொலை வழக்காக மாற்றினால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் எனக்கூறி  4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சாலை மறியல் போராட்டம்
இந்தநிலையில் நேற்று 5-வது நாளாக சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் இறந்த சீனிவாசனின் உறவினர்கள், கிராம பொது மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு் ட்சி, மக்கள் அதிகாரம், உள்ளிட்ட அரசியல் கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மர்மமான முறையில் உயிரிழந்த தொழிலாளி சீனிவாசனின் வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து உதவி கலெக்டர் நாராயணன், சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு யுவப்பிரியா, தாசில்தார் ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அப்போது உதவி கலெக்டர் கூறுகையில் சீனிவாசனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் சட்டப்படி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் அதற்கு போராட்டக்காரர்கள் சம்மதிக்காமல் காவல்துறை, கலெக்டர், வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளை கண்டித்து தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்