1400 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சுல்தான்பேட்டை வட்டாரத்தில் 1,400 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை வட்டாரத்தில் 1,400 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால், பல அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே சுல்தான்பேட்டை வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இங்குள்ள வா.சந்திராபுரம், வதம்பச்சேரி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இங்கு இதுவரை எத்தனை பேருக்கு போடப்பட்டு உள்ளது என்பது குறித்து சுல்தான்பேட்டை வட்டார சுகாதார அதிகாரி டாக்டர் வனிதா மற்றும் அதிகாரிகள் கூறியதாவது:-
1,400 பேருக்கு போடப்பட்டது
கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வா.சந்திராபுரம், வதம்பச்சேரி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இதுவரை 1,400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இன்னும் 150 டோஸ் தடுப்பூசி இருப்பு உள்ளது.
எனவே தடுப்பூசி போட வரும்போது ஆதார் கார்டு நகல் கட்டாயம் கொண்டு வர வேண்டும். அத்துடன் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.