தர்மபுரி மாவட்டத்தில் கோவில்களில் ராமநவமி விழா

தர்மபுரி மாவட்டத்தில் கோவில்களில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-04-21 17:21 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கோவில்களில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது.
ராமநவமி விழா
தர்மபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்கள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் ராமநவமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அந்தந்த கோவில்களில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும் நடைபெற்றது. ஒரு சில கோவில்களில் ராமர்-சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தர்மபுரி எஸ்.வி. ரோடு அபய ஆஞ்சநேய சாமி கோவிலில் ராமநவமி விழாவையொட்டி ராமர்சீதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயர் மற்றும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடுகளும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று தர்மபுரி அருகே ஹரிஹர நாத சாமி கோவில் தெருவில் உள்ள சீதாராம தாச ஆஞ்சநேயர் கோவிலிலும் ராமநவமி விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பெருமாள் கோவில்கள்
இதேபோன்று தர்மபுரி கோட்டை பரவாசுதேவ சாமி கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில், அக்கமணஅள்ளி ஆதிமூல பெருமாள் கோவில், ஆட்டுக்காரன்பட்டி ராதே கிருஷ்ணா பிருந்தாவனம், அதகபாடி லட்சுமி நாராயண சாமி கோவில், வரதகுப்பம் வெங்கட்ரமண சாமி கோவில், செட்டிக்கரை பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் ராமநவமி விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
ராமநவமி விழாவையொட்டி விழாவையொட்டி வெங்கடம்பட்டி கோதண்டராம சாமி கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதேபோல் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை தேவி, பூதேவி சமேத சென்னகேசவப் பெருமாள் கோவில் ராமநவமி விழாவையொட்டி இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
திருக்கல்யாண ராமர்
மொரப்பூர் அருகே தென்கரைக்கோட்டையில் உள்ள  திருக்கல்யாண ராமர் கோவில் மற்றும் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் ராமநவமியையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்