விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடங்கியது 2 நாட்களாக மருந்து இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடங்கி உள்ளது. 2 நாட்களாக மருந்து இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.;
விழுப்புரம்,
கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் நாட்டில் துரிதபடுத்தப்பட்டுள்ளது. தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் என 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தற்போது வேகமெடுத்துள்ளது. நேற்று முன்தினம் வரைக்கும் 16 ஆயிரத்து 642 பேர் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்களில் 114 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதாவது, கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் மொத்த பாதிப்பு 15,510 ஆக இருந்த நிலையில் நேற்று முன்தினம் 16,642 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 20 நாட்களில் மட்டும் 1,132 பேர் கொரோனாவின் கோரபிடிக்குள் சிக்கி உள்ளார்கள்.
தடுப்பூசி
தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் மாவட்டத்தில் ஒருபுறம் நடந்து வருகிறது. தொடக்கத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள 13 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இது தற்போது 75 இடங்களாக அதிகரிக்க செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், பின்னர் நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 பேர் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
82 ஆயிரத்து 977 பேர்
இந்த வகையில் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேல் இருந்து 75 வயதுக்கு உட்பட்டோருக்கு 19-ந்தேதி வரை, கோவிஷீல்டு (முதல் டோஸ்) 77,369 பேருக்கும், கோவாக்சின் (முதல் டோஸ்) 5,608 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 82 ஆயிரத்து 977 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவர்களில் கோவிஷீல்டு (2-வது டோஸ்) 7,797 பேருக்கும், கோவேக்சின் (2-வது டோஸ்) 777 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
பணிகள் முடங்கியது
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏற்கனவே இருப்பு வைத்து செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசிகளும் தீர்ந்து விட்டது.
கடந்த 2 நாட்களாக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் எதுவும் இல்லை. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வத்துடன் வந்த போதிலும் தடுப்பூசி மருந்து இல்லாததால், இப்பணி முற்றிலும் முடங்கி உள்ளது. மக்களும் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். இதேபோல் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களும் தவிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.
ஓரிரு நாளில் சீராகும்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு என்பது விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இல்லை, மாநில அளவில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை போதுமான அளவு இருப்பு வைத்து வழங்க மாநில சுகாதாரத்துறை தலைமையகத்தில் கேட்டுள்ளோம். தற்போது புனேயில் இருந்து தமிழகத்திற்கு தடுப்பூசி வந்துள்ளது.
ஆகவே இன்னும் ஓரிரு நாளில் விழுப்புரம் மாவட்டத்திற்கு தடுப்பூசி வரப்பெற்றதும் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
22 சதவீதம் பேர்