உளுந்தூர்பேட்டை அருகே லாரிகள் மோதல் டிரைவர் பலி குழந்தைகளை பார்க்க வேண்டும் எப்படியாவது காப்பாற்றுங்கள் என கெஞ்சல்

டிரைவர் பலி;

Update: 2021-04-21 16:34 GMT
விழுப்புரம்,

மதுரை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன்(வயது 36). சொந்தமாக லாரி வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். 
விஜயன் நேற்று முன்தினம் மாலை தனக்கு சொந்தமான லாரியில் இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் இரவு 9.30 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்ற லாரியை, அதன் டிரைவர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தினார். அந்த சமயத்தில் விஜயன் ஓட்டி வந்த லாரி முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 2 லாரிகளின் இடிபாடுகளில் சிக்கி விஜயன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். முன்னால் சென்ற லாரியை ஓட்டிய டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  இடிபாட்டில் சிக்கிய விஜயனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 
அப்போது விஜயன் தனது குழந்தைகளை பார்க்கவேண்டும் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என போலீசாரிடம் கெஞ்சினார். இருப்பினும் போலீசார் சுமார் ஒரு மணி நேரம் போராடி விஜயனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, விஜயன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே விபத்துக்குள்ளான லாரிகளை போலீசார் அகற்றினர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இந்த சம்பவத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்