ஓட்டுகளை எண்ண மேஜைகள் எண்ணிக்கை குறைப்பு
ஓட்டுகளை எண்ண மேஜைகள் எண்ணிக்கை குறைப்பு
கோவை
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரி (ஜி.சி.டி.) யில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நட க்கிறது.
இந்த நிலையில் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணுவதற்காக மேஜைகள் போடப்படும். வழக்கமாக ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்படும். கோவை மாவட்டத்தில் பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம் தொகுதியில் மட்டும் 20 மேஜைகள் போடப்படும்.
ஆனால் தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் ஓட்டு எண்ணும் மையத்திலும் சமூக இடைவெளி கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 14 மேஜைகளுக்கு பதில் 10 முதல் 12 மேஜைகள் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மேஜைக்கும் மற்றொரு மேஜைக்கும் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதனால் 14 மேஜைகள் போடப்பட வேண்டிய இடத்தில் 10 அல்லது 12 மேஜைகள் தான் போடப்படும். இதனால் தேர்தல் முடிவுகள் சற்று தாமதமாக வர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஓட்டு எண்ணும் மேஜைகளை குறைப்பதால் ஓட்டு எண்ணும் நேரம் அதிகமாகும். உதாரணத்துக்கு மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள 413 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 14 மேஜைகள் போட்டால் 29 சுற்றுகள் ஆகும்.
ஆனால் தற்போது 12 மேஜைகள் போட்டால் 34 சுற்றுகள் ஆகும். இதே போல 676 வாக்குச்சாவடிகள் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதியில் 20 மேஜைகள் போட்டு எண்ணினாலே 33 சுற்றுகள் ஆகும்.
ஆனால் அந்த தொகுதியின் ஓட்டுகளை எண்ணுவதற்கு 12 மேஜைகள் போட்டால் அனைத்து வாக்குகளையும் எண்ணி முடிக்க 56 சுற்றுகள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.