அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி:
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேத பரிசோதனையின் போது பிணம் மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை தரப்பிலும், போலீஸ் தரப்பிலும் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், பிணத்தை மாற்றி பிரேத பரிசோதனை செய்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் அய்யனார், மாவட்ட துணை செயலாளர் சரவணபுதியவன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பிணத்தை மாற்றி பிரேத பரிசோதனை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவத்துறையினர், போலீசார் மீது விசாரணை நடத்தி அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.