கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் பூங்காக்கள் மூடல்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் பூங்காக்கள் மூடப்பட்டன.;
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் வகையில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியுள்ளது. அதுபோல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து நாட்களிலும் தமிழகத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும், பூங்காக்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள், அருங்காட்சியகங்களுக்கும் அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம், ஆரோவில் கடற்கரை பகுதிகளில் நேற்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பு பலகைகள் கடற்கரையோரங்களில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி கடற்கரைக்கு வந்த பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் வருவதை தவிர்க்கும் வகையில் அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டன. விழுப்புரம் நகராட்சி பூங்கா, விழுப்புரம் பூந்தோட்டம் குளத்தில் உள்ள பூங்கா, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நடைபயிற்சியுடன் கூடிய பூங்கா உள்ளிட்டவை பூட்டிக்கிடந்தன.
அதுபோல் விக்கிரவாண்டி அருகே வீடூர் அணையில் உள்ள பூங்கா, செஞ்சிக்கோட்டை பூங்கா, வானூர் அருகே திருவக்கரையில் உள்ள கல்மரப் பூங்கா உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பூங்காக்கள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் பூங்காக்கள் அனைத்தும் வெறிச்சோடியது.