கடலூரில் கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கடலூர் தனியார் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-21 16:26 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் கல்லூரி, விடுதிகளிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதன்படி கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி கூட்ட அரங்கமும் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 60 நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போராட்டம்

இந்நிலையில் நேற்று காலை அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தங்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை. குடிநீர் கடந்த 2 நாட்களாக இல்லை. தங்கி இருக்கும் அறையை சுத்தம் செய்வது கூட இல்லை. ஆகவே எங்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று கூறி, கல்லூரி வளாகத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நோயாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

அதன்பிறகு அவர்களுக்கு தண்ணீர் கேன் வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் தங்கி இருக்கும் அறையை சுத்தம் செய்து கொடுத்தனர். தரமான உணவு வழங்குவதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து நோயாளிகள் ஆக்சி மீட்டர் சரியாக வேலை செய்யவில்லை. அந்த கருவியை மாற்றி, புதிதாக கருவி வாங்கி அதன் மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை சரி செய்து தருவதாக அதிகாரிகள் கூறினர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்