இரவு நேர ஊரடங்கினால் சொந்த ஊர் செல்ல முடியாமல் விழுப்புரம் பஸ் நிலையத்திலேயே தூங்கிய பயணிகள் உணவு கிடைக்காமல் தவிப்பு

இரவு நேர ஊரடங்கினால் சொந்த ஊர் செல்ல முடியாமல் விழுப்புரம் பஸ் நிலையத்திலேயே பயணிகள் படுத்து தூங்கினர். அவர்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர்.

Update: 2021-04-21 16:16 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கை அரசு அமல்படுத்தியது.
இந்த ஊரடங்கு காரணமாக இரவு 10 மணியுடன் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதுபோல் அனைத்து கடைகளும் இரவு 9 மணியுடன் மூடப்பட்டன. 

 ஒவ்வொரு பஸ் நிலையத்தில் இருந்தும் வெளியூர்களுக்கு செல்லக்கூடிய கடைசி பஸ்சின் நேர விவரம் குறித்த அட்டவணை பஸ் நிலையங்களில் ஒட்டப்பட்டிருந்தது. இருப்பினும் இரவு நேரத்தில் பஸ் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் ஏராளமான பயணிகள் பசியும், பட்டினியோடும் பஸ் நிலையத்திலேயே படுத்து தூங்கினர்.

கடைசி பஸ்கள்

அந்த வகையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, காஞ்சீபுரம் ஆகிய இடங்களுக்கு மாலை 6.30 மணியளவில் கடைசி அரசு பஸ்சும், வேலூருக்கு மாலை 6.40 மணிக்கும், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு இரவு 8 மணிக்கும், கடலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு இரவு 8.30 மணிக்கும், செஞ்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களுக்கு இரவு 9 மணிக்கும் கடைசி பஸ் புறப்பட்டுச்சென்றது.


சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தென்மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் நேற்று முன்தினம் பகலில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த நிலையில் அங்கிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் இல்லாததால் பல மணி நேரம் விழுப்புரத்திலேயே தவித்தனர்.

 அதுபோல் வேலூர், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயணிகள் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்காக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். ஆனால் சென்னை, திருச்சிக்கு மாலை 6.30 மணிக்கு கடைசி பஸ்கள் புறப்பட்டுச்சென்றன. அந்த பஸ்களை தவற விட்ட பயணிகள், அதன் பிறகு பஸ்கள் இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

பயணிகள் தவிப்பு

இவ்வாறு நூற்றுக்கணக்கான பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தும் பஸ்கள் இயக்கப்படாததால் வேறு வழியின்றி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலேயே தங்கினர். நகரில் உள்ள ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இரவு 8.30 மணிக்கெல்லாம் மூடப்பட்டதால் உணவும் கிடைக்காமல் இவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

இதனால் குடிதண்ணீரை பருகிக்கொண்டு அரை வயிற்றுப்பசியோடு விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலேயே படுத்து தூங்கினர். ஏற்கனவே சுகாதார சீர்கேடாக இருக்கும் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சிறுநீர் கழிக்கும் இடம், கழிவறை பராமரிப்பின்றி இருப்பதால் அந்த துர்நாற்றத்திற்கு மத்தியிலும், கொசுத்தொல்லையாலும் நிம்மதியாக தூங்க முடியாமல் பயணிகள் தவித்தனர்.

பின்னர் நேற்று அதிகாலை 4 மணி முதல் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டவுடன் அரைகுறை தூக்கத்துடன் பயணிகள் அந்த பஸ்களில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்றனர்.

மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

கொரோனா தொற்று படிப்படியாக குறையும்பட்சத்தில் அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். எனவே அரசின் மறு உத்தரவு வரும் வரை இரவு நேரங்களில் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பசியும், பட்டினியுமாக பஸ் நிலையங்களில் தவிக்கும் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தங்கும் இட வசதியை ஏற்படுத்தி கொடுப்பதோடு அவர்களுக்கு உணவு ஏற்பாடும் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்