நாகை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
நாகை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரவீன்நாயர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:-
நாகை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரவீன்நாயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உதவித்தொகை
நாகை மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது. இத்திட்டத்தில் 1.4.2021 முதல் 30.06.2021 வரை காலாண்டிற்கு பயன்பெற நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பள்ளி இறுதி வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வி தகுதிகளை பதிவு செய்து 31.1.2021 அன்று 5 ஆண்டுகள் முடிவுற்றிருக்க வேண்டும்.
பொது பிரிவினர், மேற்கண்ட கல்வித்தகுதிகளை பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் திட்டத்தில் தகுதி உடையவர்கள். உதவித்தொகை பெற விரும்புவோரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரமாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. வயது வரம்பு, ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர வகுப்பினருக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். உதவித் தொகை பெற விரும்புவோர் அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களாக இருக்க கூடாது.
மேற்கண்ட தகுதியுடைய மனுதாரர்கள் https\tnvelaivaaippu.gov.in\ என்ற இணையத்தளத்தில், உதவித் தொகை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே உதவித் தொகை பெற்று வருபவர்கள், 2021-22-ம் ஆண்டிற்கான சுய உறுதி மொழி ஆவணங்களை வருகிற 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.