ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் ஆக்சிஜன் சேமிக்க ஏற்பாடு
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் ஆக்சிஜன் சேமிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 420 படுக்கை வசதிகள் தயார் படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு தொற்று உறுதியான 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மோசமான நிலைக்கு சென்றால், தீவிர சிகிச்சை அளிக்க வெண்டிலேட்டர், ஆக்சிஜன் வசதி உள்ளது. மருத்துவமனையில் 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி இருக்கிறது.
இங்கிருந்து கொரோனா வார்டுகளுக்கு சிறிய குழாய்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. நேரடியாக ஆக்சிஜன் வசதியுடன் 110 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா 2-வது அலையால் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால், கூடுதலாக ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:- ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி உள்ளது. தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேவையான வசதிகள் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
அதன்படி ஊட்டிக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ஆக்சிஜன் சேமித்து வைக்க புதியதாக தொட்டி அமைக்கப்பட உள்ளது. இதற்காக தனிதளம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால், அவர்கள் சுவாசிக்க ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது.
ஈரோடு, கோவையில் இருந்து லாரியில் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு ஊட்டி மருத்துவமனையில் உள்ள தொட்டியில் நிரப்பப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் தொற்று உறுதியானவர்கள் சிகிச்சை பெற்று வருவதால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அங்கு நுழைவுவாயிலில், கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் வெளியே செல்லக்கூடாது. வெளியே இருந்து உள்ளே வரக்கூடாது என்று பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது.