ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்கள் வெறிச்சோடின
மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஊட்டி, குன்னூர் ஆகிய ரெயில் நிலையங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடின.
ஊட்டி,
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாத கடைசியில் ஊட்டி மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு முன்பதிவு செய்தவர்கள் மட்டும் பயணிக்கும் வகையில் மலைரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.
அதில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கான தடை அமலுக்கு வந்தது.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழக அரசின் கட்டுப்பாடுகளின்படி தொற்று பரவலை தடுக்க ஊட்டி மலைரெயில் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது.
இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும், ஊட்டி-குன்னூர் இடையேயும்(தினமும் தலா 3 முறை இயக்கப்பட்டு வந்தது) மலை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக ஊட்டி ரெயில் நிலையம், குன்னூர் ரெயில் நிலையத்தில் உள்ள இருக்கைகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
அதனை பார்க்க ஆளில்லாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது. மற்ற இடங்களில் இயக்கப்படும் ரெயில்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளுக்காகவே இயக்கப்பட்டு வந்த மலைரெயில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.