செய்துங்கநல்லூர் அருகே தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் 4 சிறுவர்கள் கைது
செய்துங்கநல்லூர் அருகே தொழிலாளியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.;
ஸ்ரீீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கருங்குளம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த சின்னதம்பி மகன் அங்கப்பன் (வயது 34). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கருங்குளம் சொக்கர்கோவில் பகுதியில் உள்ள தவணை மடையில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய 4 சிறுவர்கள் அங்கப்பனிடம், இந்த குளத்தை புளியங்குளம் கிராமம் சார்பாக குத்தகைக்கு எடுத்துள்ளோம். இங்கு வந்து மீன் பிடிக்க கூடாது என்று கூறி அவதூறாக பேசி தகராறு செய்து உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார், அந்த 4 சிறுவர்களையும் கைது செய்தனர்.