திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வரவேண்டாம் என கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.;

Update: 2021-04-21 13:15 GMT
திருவண்ணாமலை

பவுர்ணமி கிரிவலம்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். கார்த்திகை தீப திருவிழாவுக்கு அடுத்து சித்ரா பவுர்ணமியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

தடை

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அ றிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்லும் சித்ரா பவுர்ணமி வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.16 மணிக்குதொடங்கி 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.59 மணி வரை உள்ளது.
இந்த சித்ரா பவுர்ணமியில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர்சந்தீப்நந்தூரி கூறியதாவது:-

பக்தர்கள் வரவேண்டாம்

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தொற்று பரவாமல் பொதுமக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்