தீ விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

தீ விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-21 12:19 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மாநெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 26). இவருக்கும், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள எம்.எம்.சத்திரம் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நாகராஜ் (30) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற் றது. பிரியா-நாகராஜ் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரியா கடந்த 9-ந்தேதி எம்.என்.சத்திரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் மண் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அடுப்பு சரியாக எரியாததால் மண்எண்ணெய் ஊற்றியதாக தெரிகிறது.

எதிர்பாராதவிதமாக தீ மளமளவென எரிந்து பிரியாவின் முகம், கை, கால் உள்ளிட்டவைகளில் காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய பிரியாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரியா பரிதாபமாக பலியானார். இது குறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்