சிறுதானிய உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்

குடிமங்கலம் பகுதியில் சிறுதானிய உற்பத்தியில் ஆர்வம் காட்டி வரும் விவசாயிகள் இறவைப்பாசனத்தில் கம்பு சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.

Update: 2021-04-21 11:43 GMT
போடிப்பட்டி
குடிமங்கலம் பகுதியில் சிறுதானிய உற்பத்தியில் ஆர்வம் காட்டி வரும் விவசாயிகள் இறவைப்பாசனத்தில் கம்பு சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.
பாரம்பரிய உணவுகள்
ராகி கூழ், கம்பஞ்சோறு, சோள அடை என்று சாப்பிட்டு வளர்ந்த நம் முன்னோர்கள் ஆஸ்பத்திரி வாசலை மிதிக்கும் அவசியம் இல்லாமல் இருந்தது. இன்று பெரும்பாலானோர் உணவுக்கு இணையாக மருந்துகளையும் எடுத்துக் கொள்ளுமளவுக்கு உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்குக்காரணம் நமது உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளக்கூடிய உண்மையாகும். ஆனாலும் நாக்குக்கு அடிமையாகி நமது பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்து அவசரமாகவும் ஆரோக்கியமற்றதாகவும் தயாரிக்கப்படும் துரித உணவுகளைச் சாப்பிட்டு பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் உணவே மருந்து என்றிருந்த நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலைக்கு பலரும் தள்ளப்பட்டு விட்டனர்.
ஆனால் சமீப காலமாக சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருவது நல்ல மாற்றமாகும். இதனால் கம்பு, சோளம், ராகி, சாமை, தினை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களுக்கான தேவை அதிகரித்து நல்ல விலை கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து சிறுதானியங்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
பறவைத் தாங்கிகள்
அந்தவகையில் குடிமங்கலம் பகுதியில் இறவைப் பாசனத்தில் கம்பு சாகுபடி செய்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மானாவாரியில் அதிக அளவில் சிறுதானியங்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் சிறுதானியங்களுக்கான தேவை குறைந்ததால் போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் பல விவசாயிகள் சிறுதானிய சாகுபடியை கை விட்டு விட்டனர். ஆனால் தற்போது மீண்டும் சிறுதானியங்களுக்கு மவுசு கூடியுள்ளது.
வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் சிறுதானியங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தற்போது இந்த பகுதியில் இறவைப் பாசனத்தில் கம்பு சாகுபடி செய்துள்ளோம்.பொதுவாக சிறுதானிய சாகுபடிக்கு அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை. எனவே வறட்சியான பகுதிகளுக்கு ஏற்ற பயிராக சிறுதானியங்கள் உள்ளது. 
மகசூல்
விதைப்பு சமயத்தில் விதை முளைக்கும் அளவுக்கு மண்ணில் ஈரப்பதம் இருந்தால் போதும்.பின்னர் சரியான மழை இல்லாவிட்டால் கூட பயிர் பிழைத்துக் கொள்ளும். அதேநேரத்தில் போதுமான அளவில் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்போது நல்ல மகசூல் கிடைக்கும்.அதனடிப்படையில் தற்போது இறவைப் பாசனத்தில் கம்பு சாகுபடி செய்துள்ளோம்.நாட்டு ரகங்கள் சாகுபடி செய்யும்போது பூச்சி, நோய் தாக்குதல் பெரிய அளவில் இருக்காது. கிளி உள்ளிட்ட பறவைகள் முற்றிய கதிர்களை சேதப்படுத்துவதுண்டு. ஆனாலும் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சியினங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பறவைகளுக்குக் கொடுக்கும் கூலியாக அதனை நினைத்துக் கொள்ளலாம். 
 சிறுதானிய சாகுபடியில் மட்டுமல்லாமல் அனைத்து விளைநிலங்களிலும் பறவைத் தாங்கிகள் அமைத்து பறவைகள் உட்காருவதற்கு வழி செய்து கொடுப்பதன் மூலம் பூச்சி தாக்குதலைத் தவிர்க்கலாம். சிறுதானிய சாகுபடியில் அறுவடையின் போது அதிக எண்ணிக்கையில் கூலி ஆட்கள் தேவைப்பட்டது. ஆனால் ஆட்கள் பற்றாக்குறை நிலவி வந்ததும் பலரும் சிறுதானிய உற்பத்தியைக் கைவிடுவதற்குக் காரணமாக இருந்தது.ஆனால் அறுவடைக்கு தற்போது நவீன எந்திரங்கள் வந்து விட்டது. இவ்வாறு  அவர் கூறினார்.
தேனும் தினைமாவும் சாப்பிட்டு வலுவுடன் வாழ்ந்த நம் பாட்டன் முப்பாட்டனைப் போல நமது வருங்கால சந்ததிகளும் வாழ சிறுதானிய உற்பத்தி நிச்சயமாக கைகொடுக்கும்.


---------------

மேலும் செய்திகள்