கோவை
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 69 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதில் 63 ஆயிரத்து 285 பேர் குணமடைந்து உள்ளனர். 708 பேர் இறந்து உள்ளனர். மேலும் நாள்தோறும் 600 பேர் முதல் 700 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
விரைவில் இது 1,000 பேராக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக 940 படுக்கை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை அரசு ஆஸ்பத்திரியில் 550 படுக்கைகள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 680 படுக்கைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், காருண்யா, பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் என மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன.
இதுதவிர தனியார் மருத்துவமனைகளில் 3 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன.
கோவையில் விரைவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டும் அபாயம் உள்ளது. அப்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக கூடுதலாக 940 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி கோவை வேளாண் பல்கலை க்கழகத்தில் 200 படுக்கைகளும், பொள்ளாச்சி பி.ஏ. கல்லூரியில் 240 படுக்கைகளும், கோவை சி.ஐ.டி. கல்லூரியில் 500 படுக்கைகளும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
மாவட்டத்தில் உள்ள பிற கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பியதும், இங்கு உடனடியாக சிகிச்சைக்காக கொரோனா தொற்று நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவும் தயாராக உள்ளது. கோவையில் அதிகரித்து வரும் தொற்றுக்கு ஏற்ப பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஒரே நாளில் 7 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் தற்போது நாள்தோறும் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 38 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
----
Reporter : P.VIJAYAN Location : Coimbatore - Coimbatore