சேலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது 9 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

Update: 2021-04-20 22:53 GMT
சேலம்:
சேலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.
கடைகள் அடைக்கப்பட்டன
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று முதல், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் இந்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதையொட்டி சேலம் மாநகரில் பெரும்பாலான இடங்களில் இரவு 9 மணிக்கே கடைகள் அடைக்கப்பட்டன. சில இடங்களில் ஒருசிலர் கடைகளை அடைக்க சிறிது காலதாமதம் செய்தனர். நேற்று முதல் நாள் என்பதால் அவர்களிடம் உடனடியாக கடைகளை அடைக்குமாறு அந்தந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அறிவுறுத்தினர். டாஸ்மாக் கடைகளை பொறுத்த வரையில் அரசு உத்தரவின்பேரில் இரவு 9 மணிக்கு மூடப்பட்டன.
வெறிச்சோடிய பஸ் நிலையம்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் ஏற்கனவே அறிவித்தப்படி இயக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டன. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வந்த பயணிகள் ஊருக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். நகர பஸ்கள் இரவு 9.30 மணி வரை இயக்கப்பட்டன.
பகல், இரவு என எப்போதும் பரபரப்பாக காணப்படும் சேலம் புதிய பஸ் நிலையம் நேற்று இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோ உள்ளிட்ட எந்த ஒரு வாகனமும் இயக்கப்படாததால் சாலைகளும் வெறிச்சோடின. இதற்கிடையே இரவு நேர ஊரடங்கை மீறி சுற்றி திரிந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து விடிய, விடிய கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்